Search Homes Search homes near by you
Price
Beds
Baths
Type
Sq Ft
New

பொது வேட்பாளர் ஜனாதிபதியானால் ஆறு மாதங்களில் பதவி விலக வேண்டும்; ஒப்பந்தம் கைச்சாத்து!

Back

எதிரணியின் பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் (அதாவது பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்) அவர் ஜனாதிபதிப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் நிபந்தனைகள் அடங்கிய ஒப்பந்தங்கள் எதிரணிக் கட்சிகளிடையே கைச்சாத்திடப்படவுள்ளன.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக எதிரணியின் முக்கியஸ்தர்களை மேற்கொள்காட்டி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சமாதானத்துக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரருடன் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ள அரசியல் கட்சிகளும் குழுக்களும், இந்த ஒப்பந்தத்தில் அன்றைய தினம் வெவ்வோறு நேரங்களில் கைச்சாத்திடவுள்ளன.

இதில் பொதுவேட்பாளராக தெரிவு செய்யப்படுபவர், தேர்தலுக்கு முன்னரே ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக ஒரு கடிதத்தை கையளிக்க வேண்டும் என்ற விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. எதிரணியின் முக்கியஸ்தர்களுக்கிடையில் கொழும்பில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்ற சந்திப்புகளின்போது, ஒப்பந்தங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் படி பொது வேட்பாளராக தெரிவு செய்யப்படுபவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர், ஆறு மாதங்களுக்குள் தனது பதவியை இராஜினாமா செய்வார். அத்துடன், முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தங்களை அவர் சட்டமாக்க வேண்டும் என்ற விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயகக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளும், 27 சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளனர்.